Friday 1 February 2013

வேத வாசிப்பிற்கான உங்கள் அறிவுரைகள் என்ன?

 
 
நான் வேதம் வாசிக்கிறேன், ஆனால் அதனை முறைப்படி எப்படி வாசிப்பது, புரிந்துகொள்வது?

உனக்கு பதில் எழுதுவதாக எண்ணி, உலகத்தில் இக்கேள்வியோடு உள்ள அனைவருக்கும் இக்கடிதத்தை எழுதுகின்றேன். மகிமை தேவன் ஒருவருக்கே.

பாடப் புத்தகம் மற்றும் முதல் பாடம்

வேதம் என்பது நமது கையில் கொடுக்கப்பட்ட இறைவனின் பாடப்புத்தகம். தேவன் மனிதனைப் படைத்த நாட்களில் தேவனே அவனுக்கு எல்லாமாயிருந்தார், மனிதன் பாதை மாறியபோது நியாயப் பிரமாணங்களைக் கொடுத்து, மனிதனுக்கு பாதையைக் காட்டிக்கொடுத்தார். தேவன் கொடுத்த நியாப்பிரமாணங்கள் கட்டளைகளாகவே பாவிக்கப்பட்டவைகள். நியாப்பிரமாணத்தின் அந்நாட்களில், சட்டத்தை மீறுபவனுக்கு சட்டென தண்டை கிடைக்கும்.  அவ்வகை நியாயப்பிரமாணங்களில் மனிதர்கள் கட்டுண்டவர்களாயிருந்தார்கள். பிரமாணத்திற்கு பலர் கட்டுப்பட்டு வாழ்ந்தாலும், சட்டத்திற்கு மறைவாய் தவறு செய்யும் அளவிற்கு மனிதனின் மனநிலை பாவத்தில் கட்டுண்டு கிடந்தது.

கொலை செய்தாலோ, திருடினாலோ, விபச்சாரம் செய்தாலோ அது தெரியவந்தால் மாத்திரமே அவன் தண்டிக்கப்படுவான். தெரியவில்லையென்றால், தன்னைத் தானே மறைத்து தப்பித்துக்கொள்ளுவான், தண்டனையை நேரடியாக தேவனிடமிருந்து பெறும் நிலைக்குத் தன்னைத் தள்ளிக்கொள்ளுவான். நியாயப்பிரமாணங்களுக்கும், கட்டளைகளுக்கும் கட்டுப்படாத மனிதனுக்காக, தேவன் அநேக தாசர்களைக் கொண்டு பேசினார், எழுதிக்கொடுத்தார், அப்படியே, ஆவியானவரின் துணையோடு நமது மனம் திரும்புதலுக்காகவும், நமது இரட்சிப்பிற்காகவும், தேவனை நாம் அறிந்துகொள்வதற்காகவும், அநேகருக்கு தேவனை அறிவிப்பதற்காகவும் எழுதப்பட்டு இன்று நமது கையில் இருப்பதே வேத புத்தகம். தேவன் பேசியவைகள், மனிதன் பேசியவைகள், தூதன் பேசியவைகள், ஆவியானவரின் ஆளுகைகள், இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகள், அவரின் அற்புதங்கள், உவமைகள், பல்வேறு தீர்க்கதரிசனங்கள், வாக்குத்தத்தங்கள், போதனைகள், அப்போஸ்தலர்களின் ஊழியங்கள் உட்பட பலவற்றை நாம் தேவனைப் பற்றி அறிந்துகொள்ளும் நோக்கத்துடனும், தேவனண்டை சேர்க்கப்படும் நோக்கத்துடனும் இவ்வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 

வேத புத்தகம், நாம் இந்த உலக கல்லூரிகளில் பயிலும் புத்தகங்கள் போன்றதல்ல. உலகக் கல்வியில் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு புத்தகங்கள் கொடுக்கப்படும். கல்லூரியில் முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டிற்கு முன்னேறும்போது, முதலாம் ஆண்டு பாடப்புத்தகங்களைக் காட்டிலும் மேன்மையான பாடங்களை உள்ளடக்கிய பாடப்புத்தகங்கள் கொடுக்கப்படும். ஒன்றாம் வகுப்பு பயிலும் குழந்தையின் கையில் இருக்கிற புத்தகங்களை, கல்லூரி பயிலும் மாணவர்கள் கையில் கொடுப்பதில்லை இது உலகக் கல்வி.

ஆனால், தேவனாலும் அவரது ஆவியானவரின் துணையோடும், பல பரிசுத்தவான்களோடும் எழுதப்பட்ட வேதமாகிய பாடப்புத்தகம் இவ்வுலகக் கல்வியின் புத்தகங்களோடு ஒப்பிடத்தக்கதல்ல. இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவும், அதாவது இரட்சிக்கப்படவும் (இறைவனின் பள்ளியில் சேரவும்) அழைப்பிதழாக அந்த பாட புத்தகம்தான் கொடுக்கப்படுகிறது, இரட்சிக்கப்பட்டு ஆலயத்திற்கோ, ஜெபக்குழுவிற்கோ முதன் நாள் வருபவருக்கும் அதே வேதபுத்தகம்தான் கொடுக்கப்படுகிறது. இரட்சிக்கப்பட்டு, பலகோடி மக்களுக்கு சுவிசேஷத்தை அறிவித்து தேவனால் வல்லமையாகப் பயன்படுத்தப்படும் ஊழியர்கள் கையிலும் அதே புத்தகம்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறியோர், வாலிபர், பெரியோர், ஊழியர் என அனைவரும் கையில் வைத்திருப்பது ஒன்றே. அது பரிசுத்த வேதமே. பாடப்புத்தகம் ஒன்றே, எனினும் அவரவர் நிலையின்படி, வளர்ச்சியின்படி, புரிந்துகொள்ளுதலின்படி தேவன் கற்றுக்கொடுக்கும் விதங்களில்தான் வித்தியாசங்கள்.

கையில் வேதப்புத்தகம் இருக்கிறது என்பதனால், எனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என எவரும் சொல்லிவிடமுடியாது. ஏனெனில், வேதத்தில் தேவன் எழுதி வைத்திருப்பவைகளின் அதிசயமான பல காரியங்கள் தேவனை அறியாத, தேவனுக்குத் தன்னை ஒப்புக்கொடுக்காத மனிதனால் புரிந்துகொள்ள இயலாதவை. அப்படிப்பட்டோர், தங்கள் கையில் உள்ள வேதபுத்தகத்தை ஒரு கதைப்புத்தகம் போலத்தான் வாசிப்பார்கள். புரிந்துகொள்ள ஒரு மனிதன் விரும்புவான் என்றால், வேதம் பிரதானமாய் சொல்லும் இயேசுவையும், அவர் சிலுவையில் சம்பாதித்து மனுக்குலத்திற்குக் கொடுத்த இரட்சிப்பையும் அடையும்படி, எளிய நடையில் எழுதப்பட்ட சுவிசேஷத்திற்கே முதலில் செவிமடுக்கவேண்டும். முதலில் அவன் தன்னை பாவி என அறிந்துகொண்டு, ஞானஸ்நானம் பெற்று, நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்ற இயேசுவுக்கு தனது வாழ்க்கையை ஒப்புக்கொடுக்கவேண்டும். இதுவே, கல்லூரிக்குள் நுழையும் கதவு, பாடசாலையின் முதல் படிப்பினை.

இந்த உலகத்தில் வாழும் நாட்களில் நமது கையில் கொடுக்கப்பட்டுள்ள ஓர் இறைவனின் இதயத்துடிப்புகள் அடங்கிய பாடப்புத்தகம். இதனை மரணத்திற்கு முன் படித்து, புரிந்துகொண்டு பரலோகத்தில் நுழையத் தடுக்கும் பாவங்களைக் களைந்தெறிந்துவிட்டு, இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, நித்திய ஜீவனைப் பெற்று அவரோடு வாழும் அளவிற்கு தங்களைத் தகுதிப்படுத்திக்கொள்வோர். மரணத்திற்குப் பின் நடக்கவிருக்கும் நியாயத்தீர்ப்பு என்னும் தேர்வில் தேர்ச்சி பெற்று பரலோகில் நுழைவார்கள்.

முதல்வர்

இயேசுவை ஏற்றுக்கொண்ட ஒருவர் வேதத்தை வாசிக்கத் தொடங்கும்போது, அவருக்கு உடன் நின்று உதவி செய்பவர் ஆவியானவரே, ஆரம்பம் முதல் வாழ்வின் இறுதிவரை ஆசிரியரும் அவரே. பாடப் புத்தகமும் மாறப்போவதில்லை, பாடத்தைச் சொல்லிக்கொடுப்பவரும் மாறப்போவதில்லை. ஆவியானவரின் துணையின்றி, அவரால் எழுதப்பட்ட இந்த வேத வசனத்தின் சில ஆழமான அணுக்களை அடைய முடியாது, அஸ்திபாரங்ளைத் தொட முடியாது. இன்றைய காலத்தில் இருக்கிற வீடியோ சி.டி நல்லதோர் உதாரணம். வீடியோ சி.டி யினைப் கையில் எடுத்துப் பார்க்கும்போது, அதில் பதிந்திருக்கும் மூன்று மணி நேர படங்கள் அப்படியே கண்ணில் தெரிந்துவிடுவதில்லை. அதனை நம் கையில் வைத்திருக்கும்போது, அந்த சி.டியில் என்ன படம் இருக்கிறது? யார் இந்த சி.டியினை வெளியிட்டது? அவரைத் தொடர்பு கொள்ளும் முகவரி என்ன? அந்த சி.டி எங்கு தயாரிக்கப்பட்டது? என்பது போன்ற விபரங்கள் அடங்கிய வெளி வாசகங்கள் மட்டுமே நமது கண்களில் தென்படும். ஆனால், அதில் உள்ள படத்தை வெளிக்காட்டும் சி.டி பிளையரினுள் அதனை நுழைத்துவிட்டால், அந்த சி.டி பிளையர் அதிலுள்ள படத்தை நமக்கு வெளிக்காட்டும்.

அப்படியே வேதமும், கையில் வைத்திருக்கும்போதும், ஏனோ தானோ என்று வாசிக்கும்போதும், எப்போதாவது கையில் தூக்கிக்கொண்டு ஆலயம் செல்லும்போதும் ஏதோ ஒரு சில தகவல்களை மாத்திரமே தரும். போதகரோ அல்லது வேறெந்த ஊழியரோ அதனை விளக்கிச் சொல்லும்போது, பிரசங்கிக்கும்போது சில அந்தரங்க பொக்கிஷங்கள் தென்படும். நம்மையும் வேதத்தையும் இணைக்கும் சி.டி பிளையரைப் போன்ற ஆவியானவரின் துணை நமக்குத் தேவை. ஏனேனில், 'அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்' (யோவா 16:14) என்பது இயேசுவே ஆவியானவரைக் குறித்துச் சொன்ன செய்தி. தனது ஞானத்தினால் எல்லா வேத வசனங்களையும் உலக மனிதன் எடைபோட்டுவிடமுடியாது. வேத வாக்கியங்கள் ஆவியானவரின் துணைகொண்டே எழுதப்பட்டவை, எனவே மேலும் அதன் இரகசியங்களை அறிய ஆவியானவரின் துணை தேவை. இல்லையென்றால் கற்றுக்கொள்ள முடியாது, கையில்தான் வைத்திருக்கவேண்டும்.

எவரும் விளங்கும் அளவிற்கு இயேசுவின் பிறப்பையும், வாழ்க்கையையும், சிலுவைப்பாடுகளையும், மரணத்தையும், உயிர்த்தெழுதலையும் இரட்சிப்பிற்கேற்ற செய்திகளையும் கொண்டிருக்கும் பகுதிகள் ஆரம்பப் பாடங்கள், எம்மனிதரும் தெரிந்துகொள்ளக்கூடியவை, அறிந்துகொள்ளக்கூடியவை, புரிந்துகொள்ளக்கூடியவை. ஆனால், அவைகளை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே அடுத்த படிக்குள் அந்த மனிதன் முன்னேற முடியும், இதுவே முதல்வர் நடத்தும் முதற்பாடம். இந்தச் செய்தி வேதத்தில் ஆழத்தில், கண்காணும் அளவில் மேலேயேதான் மிதந்துகொண்டிருக்கிறது, கையில் எடுப்பது மட்டும்தான் நமது வேலை.

புரியவில்லை என பதறவேண்டாம்

ஒரு சிறு உதாரணத்துடன் இதனை விளக்க முற்படுகிறேன். ஒரு வீட்டிலுள்ள பெற்றோருக்கு ஐந்து பிள்ளைகள். முத்த மகனுக்கு 40 வது, இரண்டாவது மகனுக்கு, 30 வயது, மூன்றாவது மகனுக்கு 20 வயது, நான்காவது மகனுக்கு 10 வயது ஐந்தாவது மகளுக்கு 5 மாதங்கள். வீட்டில் எல்லாரும் சாப்பிடும் உணவை அப்படியே பிறந்து ஐந்து மாதங்களே ஆன மகளுக்குக் கொடுத்துவிடமாட்டார்கள். பிரியாணியே செய்யப்பட்டாலும், ஐந்து மாதங்கள் ஆன அவளுக்கு பால்தான் கிடைக்கும். இதனை பெற்றோரின் பாரபட்சம் என்று சொல்லிவிட முடியுமா? யாருக்கு எதனை எப்போது கொடுக்கவேண்டும் என்பதனை அறிந்தவர்கள் அவர்கள்தானே. அப்படியே வீட்டில் பிள்ளைகளுக்கு வேலைகளையும், பொறுப்புகளையும் வழங்கும் விதமும் பிள்ளைகளின் வயதிற்கு ஏற்றார்போலவே காணப்படும்.

ஆவிக்குரிய வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும்போது, குழந்தைகளாய்க் காணப்படும் நம்மையும் ஆவியானவர் அப்படியே நமக்கேற்ற போஜனத்தைக் கொடுத்தே வளர்க்கிறார். எனவே மற்றவர்களுக்குக் கிடைக்கிறது நமக்குக் கிடைக்கவில்லையே, அந்த வெளிப்பாடு எனக்கு இல்லையே என வருத்தப்படவேண்டாம், காத்திருங்கள், கர்த்தருடைய பிள்ளைகள் நீங்கள். ஆவிக்குரிய வாழ்க்கையில் வளரும்போது, அதிக ரகசியங்களை அறிந்துகொள்வோம், அத்துடன் அதிக பொறுப்புக்களை அவரிடத்திலிருந்து பெற்று அவருக்காக செயல்படுகிறவர்களாக மாறிவிடுவோம்.

புதிதாக வேதத்தை வாசிக்கத் தொடங்கும்போது, எல்லாம் ஒரே நாளில் உடனே நமக்குப் புரிந்துவிடுவதில்லை. அப்படி புரிந்துகொள்ளவேண்டும் என்ற விருப்பமும் வேகமும் அவரை அறிந்த உடன் மனதில் இருந்தாலும், தேவன் படிப்படியாகவே ஆவியானவரின் துணைகொண்டு அதனை அவரவர் பெலனுக்கேற்ப கற்றுத்தருகிறார். வேதத்தை வாசிக்கும்போது விளங்கவோ அல்லது புரிந்துகொள்ளவோ கடினமான காரியங்களை, தேவ மனிதர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது தவறல்ல எனினும் அதற்கு மேலாக தன் பிள்ளைக்கு தேவனே கற்றுத் தருவது நிச்சயம். அவர் பிள்ளைகளின் அப்பத்தை எடுத்த்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறவரல்ல, இரட்சிக்கப்பட்டு இயேசுவை ஏற்றுக்கொண்ட நாம் அவருடன் பந்தியிருந்து மேஜையில் போஜனம் பண்ணவேண்டியவர்கள். எனவே, சோர்ந்துபோகவேண்டாம், மற்றவர்கள் இந்த அளவு வேதத்தை அறிந்திருக்கிறார்களே என தளர்ந்துவிடவேண்டாம், வேந்தன் உனக்குள் இருக்கும்போது வெற்றி உனக்குத்தான். முதல் பந்தியில் திராட்சை ரசம் இல்லாமற் போய்விட்டாலும், இரண்டாம் பந்தியில் சுவையான ரசம் கிடைக்கும் கவலைப்படாதே. அவர் திராட்சைச் செடி, நீ கொடி. திராட்சைச் செடியே அருகிலிருக்கும்போது, கொடியாகிய உன்னில் பழம் பழுக்காமலா போய்விடும். அவர் கனிகொடுக்கிறவர். அவரது செடியில் கனி உண்டாகவேண்டும் என்றால் அது உன்னில் தான் பழுத்துத் தொங்கவேண்டும். மற்றவர்கள் வந்து பார்ப்பார்கள் பறிப்பார்கள். இயேசு உன்னோடுதான் இருக்கிறார், அவர் உனக்கு வசனங்களை விளக்கும் வேளை வரும். அவர் ஜீவ தண்ணீரல்லவா. அவரை விசுவாசிக்கிறவனின் உள்ளத்திலிருந்தும் ஜீவ தண்ணீர்களுடைய நதிகள் பாய்ந்து ஒட விரும்புகிறவரல்லவா, ஆபிரகாமுக்கு மறைக்காமல் வெளிப்படுத்தினவரல்லவா, உனக்கும் தக்க நாட்களில் வெளிப்படுத்துவார். அவர் சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்கிறவர்.

எதை வாசிப்பது முதலில்?

எங்கிருந்து தொடங்குவது? எதை வாசிப்பது? எப்படி புரிந்துகொள்வது என்பதனையும் தெரிந்துகொள்ளுதல் நல்லது. ஆதியாகமத்தில் தொடங்கி வெளிப்படுத்தின் விசேஷம் வரைக்கும் அப்படியே தொடர்ச்சியாக வாசிப்பதில் தவறில்லை, என்றாலும் எளிதில் புரிந்துகொள்ள சில வழிகளைக் கையாளுவது சிறந்தது. முதன் முதல் வேதம் வாசிக்கத் தொடங்வோர்,

இயேசுவின் வாழ்க்கையும், செய்திகளும், மனிதானாய்ப் பிறந்து மனிதருக்கு அவர் கொடுத்த ஆலோசனையும் அடங்கிய மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஆகிய சுவிசேஷங்கள் என்ற தலைப்பின் கீழுள்ள புத்தகங்களை வாசிப்பது நல்லது.  இவைகளில் இயேசுவின் வாழ்க்கை, அவர் விட்டுச் சென்ற மாதிரி, நமக்கு அவர் சொன்ன செய்தி அத்தனையும் நம்மை சீடராக்கவும், சுவிசேஷம் அறிவிப்பவர்களாக மாற்றவும் போதுமானவைகள்.

அதனைத் தொடர்ந்தோ அல்லது அவைகளை வாசித்துக்கொண்டிருக்கும்போதோ நீதிமொழிகள், சங்கீதம் மற்றும் பிரசங்கி ஆகியவற்றை இரண்டாம் பகுதியாக வாசிக்கலாம்.

இத்துடன், புதிய ஏற்பாட்டின் அப்போஸ்தலர் முதல் யூதா வரையிலான அப்போஸ்தலனாகிய பவுலின் நிருபங்களையும், மற்ற அப்போஸ்தலர்களின் நிருபங்களையும் வாசிக்கலாம்.

தொடர்ச்சியாக வெளிப்படுத்தின விசேஷத்தினை வாசிக்கலாம். அதன் பின்னர், ஆதியாகமத்திலிருந்து யோபு வரையிலான புத்தகங்களை வாசிக்கலாம்.

இப்படித்தான் வாசிக்கவேண்டும் என்று நான் கட்டாயமாக எழுதவில்லை எனினும், இப்படி வாசித்ததால் நான் பயனுற்றதால் எழுதுகிறேன். எத்தனையாய் வேதத்தை வாசித்தாலும், வாசித்தனை ஒத்துக்கொள்வதற்காகவும், அதன் அர்ப்பணத்திற்காகவும் ஓர் ஜெபம் அவசியம் தேவை. எப்படியாவது கிரமமாக வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களிலோ முழு வேதத்தையும் ஒரு முறை வாசித்துவிட முயற்சித்தால் நல்லது, என்றபோதிலும் அப்படிப்பட்ட கட்டாயத்திற்குள் தள்ளி அவசர அவசரமாக வாசித்து ஒன்றும் புரியாமம் ஓட வேண்டிய அவசியமில்லை. ஒரு வருடத்திற்குள் கட்டாயம் வேதத்தை வாசித்து முடித்திருக்கவேண்டும் என தேவன் வற்புறுத்தவும் இல்லை, உங்களால் முடிந்த வேகத்தில் ஓடுங்கள், வாசியுங்கள், வளருங்கள் தேவ ஆவியானவர் உடனிருப்பார். 

குறிப்பு எடு

பாடப்புத்தகம், முதல்பாடம் மற்றும் முதல்வர் என்றெல்லாம் அறிமுகப்படுத்தினேன், ஆனால், நீங்கள் உங்களை மாணவர்களாக மாற்றிக்கொள்ளவேண்டும். ஏதோ, கடமுறைக்கு ஓதிவிட்டுச் செல்ல வேதப்புத்தகம் ஒரு மந்திரப்புத்தகம் அல்ல. தேவன் அன்றன்று உனக்குக் கற்றுத்தரும் காரியங்கள் அபூர்வமானவைகள், ஒருவேளை உலகத்தில் வேறு எந்த மனிதருக்கும்கூட அவர் கற்றுக்கொடுத்திராததை உனக்கு அன்று கற்றுக்கொடுத்திருக்கலாம், அனால், அதனை பத்திரப்படுத்துவதும், காலம் வரும்போது உலகோர்க்கு பரப்புவதும் உன் பொறுப்பு. வேதத்தைத் திறக்கும்போது தேவன் கற்றுத்தரும் காரியங்கள் நமக்கு மட்டும்தான் அல்லது தற்போது நம்மைச் சூழ்ந்திருக்கும் மக்களுக்கு மட்டும்தான் என நினைத்துவிடக்கூடாது, அது முழு உலகத்திற்கும் கொண்டு செல்லப்படவேண்டிய செய்தியாக இருக்கலாமே. இயேசு பிறப்பின் செய்தி மேய்ப்பர்களுக்கு அறிவிக்கப்பட்டது, அவர்களுகுக்கு மட்டுமல்ல, உலகிற்கும் சொல்லவே. இதனைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

ஒரு அதிகாரத்தினை வாசிக்கும்போது, கர்த்தர் உன்னோடு இடைபடுகின்ற அல்லது பேசுகின்ற அல்லது உன் மனதினால் அதிக நேரம் ஈர்க்கப்படுகின்ற, கவனத்தை தன் பக்கம் இழுக்கின்ற, மீண்டும் வாசிக்க வைக்கின்ற வசனத்தை அடிக்கோடிட்டுக்கொள்ளலாம் அல்லது தனியே எழுதி வைத்துக்கொள்ளவேண்டும், அவைகளில், உனக்கு தேவனின் செய்தி புதைந்திருக்கும். சில நேரங்களில் அந்த வசனத்திற்கு ஒத்த வேறு வசனங்கள் உனக்கு நினைவில் வரும். அப்படிப்பட்டவைகளைக் கோர்த்துப் பார்த்தால் ஓர் செய்தி உனக்குக் கிடைக்கும். 'கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள், இவைகளில் ஒன்றும் குறையாது, இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது, அவருடைய வாய் இதைச் சொல்லிற்று, அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்'(ஏசா 34:16). நான் இப்படியாய் நினைப்பதுண்டு, என்றோ நான் பார்த்துவைத்த பெண்ணுக்கு (வசனத்துக்கு) ஒத்த மாம்பிள்ளை (வசனம்) எங்கோ கிடைக்கும்போது திருமணம் நடத்திவிடலாம், ஒரு செய்தியை பிரசங்கித்துவிடலாம் என்பதையே குறிப்பிடுகிறேன்.

வேத வாசிப்பிற்கென்று பிரத்தியேகப்படுத்தப்பட்டதோர் டைரி அல்லது குறிப்பேட்டினை வைத்துக்கொள்வது அவசியம். வேத வாசிப்பின்போது, தேவன் சொல்லித்தரும் ரகசியங்களை பலர் குறிப்பெடுக்காமல், அப்போது மாத்திரம் சுவைத்துவிட்டு அங்கேயே விட்டு விட்டு வந்துவிடுகின்றனர். நமது மூளை கணணியைப் போன்றதல்ல, நான் நினைப்பதை அப்படியே பதிவெடுத்துக்கொள்வதற்கு. ஒரு சில நாட்களின் தியானங்களை நினைவில் கொள்ள நமக்கு பெலனிருந்தாலும், நெடுநாள் தியானங்களை நினைவாக்குவதற்கு குறிப்பேடு நிச்சயம் அவசியம். இப்படிக் குறிப்புகளை எழுதி வைப்பதனால், எங்காவது பிரசங்கிக்கவும் அவைகள் உதவும், அல்லது உன் கையில் கொடுத்தவைகளை விதைப்பதற்கு அவரே விளை நிலத்தை ஏற்படுத்திக்கொடுப்பார். எத்தனயோ காரியங்களை தேவன் சொல்லிக்கொடுத்திருந்தும், அவைகளை எழுதி வைத்திராவிட்டால், எத்தனையோ பொன்னையும் பொருளையும் வாங்கியிருந்தும், அதனை பத்திரப்படுத்திவிடாத பக்குவமற்றவர்களாகவே நாம் காணப்படுவோம். அவர் வழியருகே விதைக்கிற நிலமாயிராதே. நல்ல நிலமாயிரு, அவர் விதைத்தபின்னர் அதனை உலகிற்குக் கொண்டு சென்று விளைச்சலை அவருக்குக் கையளிக்கும் அறுவடையாளனாயிரு.

திடீரென எங்காவது ஜெபக்குழுவில் அல்லது, சிறு சிறு ஜெபக் கூடுகைகளில் யாராவது நம்மை நோக்கி எதாவது வேதத்திலிருந்து சில காரியங்களைப் பகிர்ந்துகொள்ளுங்களேன் என்று சொல்லும்போது, மீண்டும் தேவனிடத்திலேயே ஓடும் வேகமும் வியர்வையும் உண்டாக வாய்ப்புகள் ஏற்படும். நாம் பங்குபெறும் கூட்டங்களில் திடீரென பிரசங்கிக்க அழைப்பு வருமாயின், அதனை தட்டிக்கழிக்கும் மனநிலையே முதலில் மேலோங்கும். 'இத்தனை நாள் உனக்குக் கற்றுத் தந்தவைகள் எங்கே?'என்று தேவன் அப்போது கேட்பாராயின், விடை மௌமாகத்தான் விளையும்.

வேதம் வாசிப்பதோடு மாத்திரமல்ல, வேத வசனங்களை மனப்பாடம் செய்துகொள்வதும் நல்லது. இயேசுவை சோதித்துப்பார்த்த சாத்தானிடம் 'எழுதியிருக்கிறதே, எழுதியிருக்கிறதே' என்று இயேசு வேத வசனங்களைச் சொல்லியே ஜெயித்தார். அப்படியே நாமும், சோதனைகள் வரும்போது, வேதத்தில் என்ன எழுதியிருக்கிறது என ஆராய்ந்து அறிந்துகொண்டு அதனை ஜெயிக்கலாம். சாத்தான் வேத வசனங்களைக் கொண்டே இயேசுவை ஜெயிக்க முற்பட்டதுபோல, ஊழியர்களைப்போல உலாவந்து, வேத வசனத்திற்கு விரோதமாகப் பேசுவோரையும் அடையாளம் கண்டு தப்பிக்கொள்ளலாம். எத்தனை பெரிய ஊழியர்களாக இருந்தாலும், அவர்கள் சொல்வதோ அல்லது பிரசங்கிப்பதோ வேதத்திற்கு விரோதமானதாயிருந்தால் அவைகளைக் கடைப்பிடிக்கவேண்டிய அவசியமில்லை. அப்படிப்பட்ட கள்ள உபதேசங்களை அடையாளம் கண்டுகொள்ளவேண்டுமென்றால், உள்ளம் வசனங்களால் நிறைந்திருக்கவேண்டும்.

வேதத்தை வாசிக்கும்போது கவனிக்கவேண்டிய சில தொடக்க நிலை அறிவுரைகள்:

வேதத்தை வாசிக்கத் தொடங்கும் தொடக்ககால இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள் ஆறு முக்கிய காரியங்களை மனதிற் கொண்டு வாசிக்கவேண்டும்.

1. வாசிக்கும் வசனத்தின் அடிப்படையில் நான் எப்படி இருக்கிறேன்?
2. என்னிடத்தில் காணப்படும் குறை அல்லது நிறை என்ன?
3. என்னோடு தேவன் பேசுவது என்ன?
4. தேவன் எப்படிப்பட்ட குணமுடையவராக காணப்படுகிறார்.
5. மற்றவர்களுக்காக என்னை என்ன செய்ய அல்லது சொல்ல சொல்கிறார்.
6. அவருக்காக நான் எப்படி செயல்பட விரும்புகிறார்.

வேதத்தை வாசிக்கும்போதெல்லாம் இந்த ஆறு காரியங்கள் மனதில் பதிந்திருப்பது நல்லது. இவைகளில் பிசகுதலோ அல்லது விடுபடுதலோ இல்லாது வேதம் நடத்தும் வழியில் நடப்பதே சிறந்த தேவப் பிள்ளையின் வாழ்க்கை.

வாசிக்கும் வசனத்தின் அடிப்படையில் எனது வாழ்வு எப்படி இருக்கிறது என்பதனை அறிந்துகொண்டு அவைகளில் குறைவுகள் காணப்படுமாயின் நிவிர்த்தி செய்யவேண்டியதும், நிறைவுகள் காணப்படுமாயின் மேலும் அவைகளைக் காத்துக்கொள்வதும் அவசியம். தேவன் என்னோடு என்ன பேசுகிறார் என்ற அறிவு, நம்மை மேலும் அவரை அறிய வைப்பதுடன், நம்மை பரிசுத்தமுடையவர்களாகவும், கறை திரையற்ற மாசற்றவர்களாக இவ்வுலகத்தில் வாழவும் உதவும். மற்றவர்களுக்கு என்ன சொல்லுவோம், என்ன பிரசங்கிப்போம், மற்றவர்களுக்கான இன்றைய செய்தி என்ன? என்ற கேள்வி மனநிலையுடனேயே வேதத்தைப் பார்க்கும் விசுவாசிகளானாலும், ஊழியர்களானாலும் தங்களுக்கு தேவன் வைத்திருக்கும் செய்தியினை அன்று வாசிக்கவும் ருசிக்கவும் இயலாதுபோய்விடுவோர். ஒருவேளை அது அவர்களில் அன்றைய நாளில் ஒட்டியிருந்த கறைகளைத் திருத்தும் செய்தியாயிருந்தால் கவனிக்கத் தவறிவிடுவார்கள். முடிவில் கறைகளோடும், தேவன் விரும்பாதவற்றை விடாதோராயும் வாழுவார்கள்.
மற்றவர்களையே பார்க்கும் மனநிலை வேதம் வாசிக்கும்போது முதலில் உண்டாகிவிட்டால், 'உன் கண்ணில் இருக்கிற உத்திரம்' தெரியாது. மற்றவர்களுக்காக தங்களை ஊழியக்காரர்களாக்கி, தேவனுக்கு முன்பாக தங்களை உதவாக்கரைகளாக்கிவைத்திருப்போர் பலர் உண்டு, ஜாக்கிரதையாயிருப்போம்.

வேதத்தை வாசிக்கும்போது, நம்மை ஆராய்ந்து பார்க்கவேண்டும், அடுத்து தேவன் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்துகொண்டு அவரைப் பின்பற்ற ஒப்புக்கொடுத்து, அவரை ஆராதிக்கவேண்டும். அத்துடன், அவரது மேன்மையான பரிசுத்தமான, உயர்ந்த, உன்னதமான நிலைகளும் குணங்களும் நமது கண்களுக்குத் தெரியும்போது, நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை அவருக்கு முன் நிறுத்திப் பார்க்கவேண்டும். மனிதர்களோடு மாத்திரமே நம்மை ஒப்பிட்டுப்பார்த்துக்கொண்டேயிருந்தால், நமது கண்களுக்கு நாமேதான் உயர்ந்தவர்களாகக் காணப்படுவோம், உயர்ந்த பிரசங்கியாராக, ஊழியராக, பாடகராக, ஆராதனை செய்பவராக, சபை மேய்ப்பராக நம்மையே நாம் உயர்த்திப் பார்த்துக்கொள்ளுவோம். நமக்குப் பின்னால் ஆவிக்குரிய வாழ்க்கையினைத் தொடங்கியர்வளை நாம் வழி நடத்தும் பொறுப்பு நமக்கு உண்டு, ஆனால் அவர்கள் மேலேயே விழிகளை வைத்து வைத்து அவர்களைக் காட்டிலும் நம்மை உயர்ந்தோராக் கருதிக்கொண்டு தன்னைக்காட்டிலும் தன்னை அழைத்த தேவன் பெரியவர் என்பதை மறந்துவிடும் ஆபத்தான நிலையும் வாழ்க்கையில் ஏற்பட்டுவிடலாம்.

இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள், ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். பரிசேயன் தேவாலயத்தில் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன், என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான். ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.(லூக் 18:0-13)

தேவனுக்கு முன்னால் நிற்கும்போது தன்னையும் தேவனையும் பார்க்கவேண்டிய பரிசேயன், தன்னையும் மனிதனையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தான், விளைவு தேவ பார்வை அவனை விட்டுக் கடந்துபோனதுதான். ஏசாயா தீர்க்கதரிசியும் அப்படிப்பட்ட மனநிலையில் வாழ்ந்த ஊழியருள் ஒருவனாயிருப்பினும், தேவன் சந்தித்தபோது, 'ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன், சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே' (ஏசா 6:5) என்று தன்னை அர்ப்பணித்துவிட்டான்.

வேதத்தை வாசிக்கும்போது, தேவனைப் புரிந்துகொண்டு, அவருக்கு முன் நான் எப்படி வாழவேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டு, மனிதருக்கு முன்பாக சாட்சியாக வாழவேண்டும். நாம் அந்தரங்கமாய் செய்கிற ஜெபத்திற்கும், வேத வாசிப்பிற்கும், தேவனுக்கடுத்த காரியங்களுக்கும் வெளியரங்கமாய் பதிலளிக்கிறவர் தேவன். தேவனோடு நமது வாழ்க்கை வேதத்தின்படி சரியாக இருப்பின், 'உதிக்கிற உன் ஒளியினிடத்திற்கு இராஜாக்கள் வருவார்கள்' என்பது நமக்கு விடுக்கப்பட்ட வாக்குத்தத்தம். தேவனோடும், தேவ வார்த்தையோடும் நெருங்கி நெருங்கி ஒட்டி ஒன்றாகி வாழும் நம்மை நோக்கி உலகத்த்தின் ஜனங்களை வரச்செய்வார் தேவன்.

எனவே இயேசு, 'மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது' (மத் 5:16) தேவனிடத்திலிருந்தும், வேத வசனங்களிலிருந்தும் நாம் பெறும் ஒளி உலக மக்களுக்கு முன் பிரகாசிக்கவேண்டும். அந்தரங்கத்தில் வேதம் வாசித்துவிட்டு, உலகத்திற்குள் பிரவேசிக்கும்போது ஒளியை அணைத்துக்கொண்டு திரியக்கூடாது. நாம் யாருடன் இருந்தாலும், எங்கு இருந்தாலும், எந்நிலையில் வைக்கப்பட்டிருந்தாலும் நம்மில் இருக்கிற தேவன் கொடுத்த ஒளி ஒளிர்ந்துகொண்டேயிருக்கவேண்டும்.

தேவ ஒளியினைப் பெற்று மற்றவர்களை மறந்துவிட்டு தேவனுக்கு முன்பாகவே நின்று கொண்டு பிரகாசித்துக்கொண்டிருப்பதில் என்ன பயன்? உலகத்திற்கு பிரகாசிப்பதற்காகத்தானே உனக்கு ஒளி கொடுத்தார். நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள், மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல்வைப்பார்கள், அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும் (மத் 5:14,15). தேவனுடைய ஒளியைப்  பெற்றுக்கொண்டு அதனை யாருக்கம் பிரயோஜனமற்றதாக வைத்திருக்கக்கூடாது. கொடுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும், தேவன் உங்களுக்குச் சொல்லிக்கொடுப்பதை மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுங்கள், அப்பொழுது தேவன் மேலும் மேலும் உங்களுக்கு ரகசியங்களைச் சொல்லிக்கொடுப்பார். வேத புத்தகமே விலைபெற்ற செல்வம் நீயே என்ற ஓர் பழைய கீர்த்தனைப் பாடல் நினைவில் வருகிறது.

வேதபுத்தகமே என்ற பாடலை என்னால் இயன்ற அளவு கணணியில் பாடி பதிவு செய்துள்ளேன் கேளுங்கள், பாடிப்பாருங்கள்.

veda puthagame song for blogger

வேதபுத்தகமே வேதபுத்தகமே
வேதபுத்தகமே விலை பெற்ற செல்வம் நீயே


பேதைகளின் ஞானமே - பெரிய திரவியமே
பாதைக்கு நல்தீபமே - பாக்கியர் விரும்புந் தேனே


என்னை எனக்குக் காட்டி - என் நிலைமையை மாற்றி
பொன்னுலகத்தைக் காட்டிப் போகும் வழி சொல்வாயே


துன்பகாலம் ஆறுதல் - உன்னால் வரும் நிசமே
இன்பமாகுஞ் சாவென்றாய் - என்றும் நம்பினபேர்க்கே


பன்னிரு மாதங்களும் - பறித்துண்ணலாம் உன் கனி
உன்னைத் தியானிப்பவர் - உயர் கதி சேர்ந்திடுவார்

No comments:

Post a Comment