தற்போது நடைபெற்ற ஓர்கூட்டத்தில் நான் என் பாவங்களை அறிக்கையிட்டு இரட்சிக்கப்பட்டேன், இரட்சிக்கப்பட்ட அந்த வேளையிலேயே ஆவியின் நிறைவையும் பெற்றேன். தொடர்ந்து என்ன செய்வது, எப்படி வாழவேண்டும்?
பாவங்களை அறிக்கையிட்டு, இரட்சிக்கப்பட்ட நீ இனி இயேசுவின் பிள்ளை, கிறிஸ்தவன் என்ற பெயரைக்காட்டிலும், இயேசுவின் நாமம் உன்மேல் தரிக்கப்பட்டிருப்பதை பிரதானமாய் உணர்ந்துகொள். எங்கு சென்றாலும் இயேசுவை பிரதிபலிக்கும் வாழ்க்கை வாழ்வது முக்கியமானது. உனது ஒரு கேள்விக்காக பல பதில்களை முன் வைக்கிறேன்.
உன்னைக் காத்துக்கொள்
முதலாவது, இரட்சிப்பு என்பது தேவனால் கிடைக்கும் ஈவு, நாம் உழைத்து சம்பாதித்ததல்ல (எபேசியர் 2:8). உனது பாவங்களுக்காக இயேசு சிலுவையில் மரித்தார் என்பதை நினைவு கூர்ந்து, பாவங்களை அறிக்கையிட்டு, இனி அதனைச் செய்யாதிருப்பேன் என்ற தீர்மானத்துடன் எனது பாவங்கள் அவரால் மன்னிக்கப்பட்டுவிட்டது என விசுவாசிக்கும்போது உனது வாழ்வில் ஓடத் தொடங்கும் சுவாசமே இரட்சிப்பு.
இரட்சிக்கப்பட்ட நீ இனி பாவம் செய்ய முடியாது என்ற எண்ணத்தோடிருப்பதைக் காட்டிலும், இரட்சிக்கப்பட்ட நீ இனி பாவம் செய்யக்கூடாது என்பதுதான் பிரதானமானது. விபச்சாரத்தில் கையும் மெய்யுமாய் பிடிக்கப்பட்ட ஸ்திரீ பிடிக்கப்பட்டு இயேசுவினிடத்தில் கொண்டுவரப்பட்டபோது, மரணம் அவளது பக்கத்தில் நின்றாலும், இயேசுவின் மன்னிப்பினால் மறுவாழ்வு அவளின் பக்கமாயிற்று. எனினும், 'நீ போ இனி பாவஞ் செய்யாதே' (யோவான் 8:11) என்ற வார்த்தையோடேயே இயேசு அவளை வழியனுப்புகிறார். மீண்டும் அவளால் விபச்சாரம் செய்ய முடியும், ஆனாலும் என்னிடத்தில் மன்னிப்பைப் பெற்ற நீ, மறு வாழ்வைப் பெற்ற நீ இனி விபச்சாரம் செய்யக்கூடாது என்பதுதான் இயேசு அவளுக்கு அளித்த பதில்.
சகோதரனே உனக்கும் இதே பதிலைத்தான் எழுதுகின்றேன். இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு முன் நீ எப்படியிருந்தாயோ நான் அறியேன், அறிந்தவர் அவர் ஒருவரே. ஆனால், இயேசுவை ஏற்றுக்கொண்டேன், பாவங்களை அறிக்கையிட்டுவிட்டேன் என்று எனக்கு நீ எழுதியிருப்பதால், 'நீ இனி பாவம் செய்யக் கூடாது' பாவம் செய்யாதபடி உன்னை நீயே காத்துக்கொள்ளவேண்டும். தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம், தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான் (யோவான் 5:18). தேவனால் பிறந்தவனை தேவன் காக்கின்றான் என்றபோதிலும், உன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையைக் காக்கும் பொறுப்பு உனக்கும் உண்டு. உன்னை நீயே பாவத்திற்கு விலக்கிக் காத்துக்கொள்ளும்போது, பொல்லாங்கனால் உன்னைத் தொட முடியாது. நீ வழி விலகிச் செல்லும்போது மாத்திரமே அவனின் வலையில் விழுவாய்.
உன்னிலே நீ வித்தியாசத்தை உணருகிறதுபோலு, உலகமும் உன்னைச் சார்ந்தோரும் உன்னிலே உண்டாகியிருக்கும் இந்த வித்தியாசத்தை உணரட்டும். இரட்சிக்கப்பட்ட பின்னர் வெளியிலே இரட்சிக்கப்படாதவனைப்போல வாழவேண்டாம். நான் இனி தவறான காரியங்களைச் செய்வதில்லை என தாராளமாகச் சொல்லத் தைரியம் வேண்டும். வெளியிலே சாட்சியான ஓர் வாழ்க்கை வாழ்வது உன்னைக் காக்கும்.
இரட்சிக்கப்பட்டுவிட்டால் பரலோகத்திற்குச் சென்றுவிடுவோம், பரிசுத்தமான தேவனோடு வாசம் செய்வோம் என்பது உண்மைதான். ஆனால், அந்த இரட்சிப்பை அசட்சை செய்து, மீண்டும் பாவம் செய்து, பின் வாங்கிப்போனால் பாதாளம்தான் நரகம்தான். இரட்சிப்பு என்பது ஆவிக்குரிய பயணத்தின் ஆரம்பமே, தொடர்ந்து சிறப்பாய் அவருக்குப் பிரியமாய் வாழ்ந்து முடித்தால் மட்டுமே அந்த இரட்சிப்பின் பூரணமான பரலோகத்திற்குள் நுழையமுடியும். பாவத்தில் விழுந்து நியாயத்தீர்ப்பில் நிற்கும்போது என்றோ இரட்சிக்கப்பட்டதை அன்று சொல்லிக்கொண்டிருக்க முடியாது, அது கணக்கில் கொள்ளப்படாது. ஒரு காரியத்தின் தொடக்கத்தைப் பார்க்கிலும் அதன் முடிவுதான் முக்கியம் முக்கியம் முக்கியம்.
நண்பர்கள்
உலகத்தோடு ஒட்டி வாழ்ந்த நாட்களில், பல நண்பர்கள், பல கேளிக்கைக் காரியங்கள், பல நேரப் போக்கு காரியங்கள் உனது அன்றாட மணித்துளிகளை சமன் செய்திருக்கலாம். ஒருவேளை இன்னும் தவறான பல பழக்கவழக்கங்களிலேயே இருக்கும் நண்பர்களின் பழகும் நேரமும், தன்மையும் அற்றுப்போகலாம். மற்றவர்கள் சினிமா செல்லும்போது, நீ தனியாக இருக்கவேண்டிய நிலை உண்டாகலாம், மற்றவர்கள் குடிக்கச் செல்லும்போது, இயேசுவின் பிள்ளை நீ தனிமைப்படுத்தப்படலாம். இப்படிப்பட்ட சூழ்நிலைகள் உண்டாகும்போது, ஏதோ எதையோ இழந்துவிட்டதைப்போன்ற உணர்வு உள்ளத்தில் உண்டாகிவிடுவது சகஜம். ஆனால், அவைகளை அவர்களைக் கொண்டு சமன் செய்ய முடியாத பட்சத்தில் தனிமை என்ற உணர்வின் ஆதிக்கம் வாழ்க்கையில் சோர்பைக் கொண்டுவந்து, உன்னை சொந்தம் பாராட்டிவிடும். சில வேளைகளில், ஏன் இரட்சிக்கப்பட்டோம்? என்ற கேள்வி கூட உண்டாகலாம் உள்ளத்தில். இயேசுவை ஏற்றுக்கொண்டதினால் இப்படி நான் மற்ற நண்பர்களோடு பழக இயலவில்லையே என்ற எண்ணம் ஆழ்மனதை இறுக்கிப்பிடித்துவிட்டால், இரட்சிப்பின் வேர் தளர்ந்துபோய்விட வாய்ப்பு உண்டு.
பழைய நண்பர்களோடு பேசுவதும், பழகுவதும் தவறல்ல, ஆனால், அவர்களுடைய பாவத்தின் பங்கேற்பது தவறு. பாவியான ஒரு மனிதனிடத்தில் பேசவே கூடாது என்றால், எந்த ஊழியரும் பாவிகளாயிருக்கின்றவர்களுக்குப் பிரசங்கம் செய்ய முடியாது. எனவே, பேசுவது தவறல்ல. ஆனால், அப்படி பேசும் வேளையில் உன்னுடைய பெலன் எப்படி இருக்கின்றது என்பதை தெரிந்துகொள்வது நல்லது. யார் யாரை இழுக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்வது நல்லது. உதாரணமாக, சினிமாவுக்குச் சென்றுகொண்டிருக்கும் வாலிபன் ஒருவன் உன்னைச் சந்திக்கிறான், சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தபின்னர் உன்னையும் சினிமாவுக்கு அழைக்கிறான், நீயோ 'நான் சினிமா பார்க்கமாட்டேன்' என்கிறாய். அவனோ, 'இது ஒன்னும் தப்பான சினிமா இல்ல, குடும்பத்தோட எல்லாரும் பார்க்கிற படம் தான்' என்கிறான். உனது மனதின் பெலன் சற்று தளர்ந்து, அப்படியா அவனுடன் போவோமா, 'அதுதான் தப்பான படம் இல்லை என்று அவன் சொல்லிவிட்டானே' என அவன் பக்கம் நீ இழுக்கப்பட்டு அவனுடன் சென்றுவிட்டால், இறுதியில் சினிமாவினால் ஈர்க்கப்பட்டு, ஆவிக்குரிய சிறகினை இழந்து சினிமாவின் சிறைக்குள் கிடப்பாய்.
நண்பர்களோடு பழகும்போது, அவர்கள் ஏதாவது விரோதமான காரியங்களை உனக்கு முன் வைக்கும்போது, நீ இரட்சிக்கப்பட்டவன், இயேசுவைப் பின்பற்றுகிறவன். வேதத்தின் வசனத்தில் நடக்கிறவன் என்பதைச் சொல்வதில் தவறில்லை. இப்படிச் சொல்வதில் கூச்சம் வேண்டாம், வெக்கம் வேண்டாம். அப்படி தொடர்ந்து சொல்லும் பட்சத்தில், நண்பர்களின் மனதில் நீ இப்படிப்பட்டவன், இயேசுவின் பிள்ளை என்கிற நற்செய்தி பதிவாகிவிடும்.
எவரோடும் பேசும் வேளையில், உனது பெலத்தை புரிந்துகொள். உனது விசுவாசத்தை தளரச் செய்யும் கரியங்களோ, உனது இரட்சிப்பின் அஸ்திபாரத்தை அதிரச் செய்யும் காரியங்களோ அவனால் உண்டாகுமென்றால் அங்கிருந்தும், அவனிடமிருந்தும் அகன்றுவிடு, இல்லையேல் அவனுடனான உறவு உனது ஆவிக்குரிய வாழ்க்கையைக் கொன்றுவிடும். நீ பெலனடைந்து, திடனடைந்து அவனைச் சந்திக்க தைரியமடைந்து பின்னர் சென்று அவனைச் சந்தித்து உன் பக்கம் இழுப்பதிலும், ஈர்ப்பதிலும் தவறில்லை.
குழுவோடு இணைந்துகொள்
நண்பர்களுடன் நடந்துகொள்ளவேண்டிய விதங்களைக் குறித்து உனக்கு எழுதியிருந்தேன். எனினும், பாவத்தில் கிடந்த நண்பர்களோடு பழைபடி ஐக்கியம் கொண்டு வாழ்ந்துகொண்டிருந்ததுபோல இனி நீ வாழ முடியாது என்பது திண்ணம். இது ஓர் வெற்றிடத்தை உன்னில் உண்டாக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தேன்.
இதனை ஈடு செய்யவும் நீ கற்றுக்கொள்ளவேண்டும். புதிய ஆவிக்குரிய நண்பர்கள், குழுக்கள், ஊழியங்கள், சபைகளுடன் நீ உன்னை இணைத்துக்கொள்ளவேண்டும். இது உனது நண்பர்களின் வட்டத்தைப் பெருக்கும், தனிமையைச் சுருக்கும். உனது ஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் உதவியாயிருக்கும். தனியாய் ஓடி தடுக்கி விழுந்தால், தூக்கிவிடுவதற்கு யாருமிருக்கமாட்டார்களே. எனவே, ஆவிக்குரிய நண்பர்கள், ஐக்கியத்துடனான உடன்பாடுகள் நிச்சயம் தேவை. அவர்களோடு இணைந்துகொள்ளும் பட்சத்தில் உனது ஆவிக்குரிய வாழ்வின் தாலந்துகளை உபயோகிக்கவும் சமயம் கிடைக்கும்.
ஆவியின் நிறைவு, அபிஷேகம்
நாம் இரட்சிக்கப்படும்போது, 'நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்' (ரோமர் 8:16). இது இரட்சிக்கப்படும்போது நிகழும் நிகழ்வு. தேவனை விட்டு தூரமாய் சென்றுகொண்டிருந்த நமது மாம்சீக ஆவி, மனந்திரும்பி தேவனுடைய ஆவியுடனே கூட இணைந்துகொள்வதுதான் இரட்சிப்ப்பு. இருமுனை ஈர்ப்பு ஏற்பட்டு ஒரே முனையில் தேவ ஆவியானவர் நடத்தும் பாதையில் அடியெடுத்துவைக்கத் தொடங்குவோம். நம்முடைய ஆவி, பயப்படும் ஆவியாக இராமல், அப்பா பிதாவே என்று கூப்பிடுகின்ற புத்திர சுவிகாரத்தின் ஆவியாக மாறிவிடுகிறது (ரோமர் 8:15).
பரிசுத்த ஆவியானவரால், நாம் அவருடைய பிள்ளை என முத்திரை போடப்படுகிறோம்.நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். (எபே 1:13) இப்படியாய் நம்மை ஆவியானவர் முத்திரையிட்டாலும், அவர் நம்முடைய ஆவியோடே கூட இணைந்து நமக்குள்ளேயே வாசம் செய்கிறார். எனவே இயேசு, உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும். இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது, அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள் (யோவான் 14:17) என்று சொன்னார்.
இரட்சிப்பின் அனுபவத்தின்போது, நம்முடைய ஆவி தேவனுடைய ஆவியினால் முத்திரிக்கப்பட்டு, பெலமாக தேவ ஆவியுடன் இணைக்கப்படுகிறது. எனவே இயேசு, என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார் (யோவா 14:26) என்று சொன்னார்.
இப்படி உன்i முத்திரித்த, உன்னுடைய ஆவியோடு கூட இணைந்த ஆவியானவரை நீ வரும் நாட்களில் உனது வாழ்க்கையில் துக்கப்படுத்திவிடக்கூடாது. எபேசியருக்கு எழுதிய நிருபத்தில் பவுல், அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்தஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்'(எபே 4:30) என எச்சரிக்கிறார்.
இரட்சிக்கப்ட்ட நாளுக்கு முன்னாக நீ மட்டும் உனது ஆவியுடன், மாம்சத்துடன் வாழ்ந்திருக்கலாம். ஆனால், இரட்சிக்கப்பட்ட பின்னர், 'கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன், ஆயினும், பிழைத்திருக்கிறேன், இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார், நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்' (கலா 2:20) என்று பவுல் தன்னைக் குறித்து எழுதிய வசனம் உனக்கும் பொருந்தும்.
இத்தனையாய் தேவ ஆவியானவருடன் நீ இணைந்துகொள்வது, உன்னை சத்தியத்தில் நடத்தினாலும். உலகத்திற்கு உன்னைக் கொண்டு அவர் செய்ய நிர்ணயித்த காரியங்ளைச் செய்து முடிப்பதற்கான அபிஷேகத்தினையும் அவர் கொடுக்கின்றார். நம்முடைய ஆவி அவருடைய ஆவியுடனே கூட இணைந்துகொண்டாலும், நீ அதினால் நடத்தப்பட்டாலும் போதிக்கப்பட்டாலும், ஆவியானவர் விரும்பும் தன்னுடைய திசைக்கும் உன்னைத் திருப்புவார். தேவ ஆவியானவருக்கும் உனக்கும் உள்ள உறவு அதாவது இரட்சிப்பு மட்டும் போதும் என்று இருந்துவிடமுடியாது. தேவன் தான் தெரிந்தெடுக்கும் ஒவ்வொருவரையும், விசேஷித்ததோர் தம்பணியினை நிறைவேற்ற குறித்திருக்கிறார். இரட்சிக்கபட்டோம் என்று நீ இருந்துவிடாமல், உன்னை அவர் தன் பின்னே நடத்திச் சென்று, உன்மேலுள்ள தனது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக கொடுக்கப்படுவது அபிஷேகம்.
அந்நியபாஷை ஓர் அபிஷேகத்தின் அடையாளமாயிருந்தாலும், அது மட்டுமே அபிஷேகத்தின் அடையாளம் என்று வேதம் வர்ணிக்கவில்லை. அப்போஸ்தலர்களின் நாட்களில் அவர்கள் மேல ஆவியானவர் வந்தபோது, அவர்கள் பல்வேறு வேறு பாஷைகளை பேசினார்கள். அந்நிய பாஷையும் ஆவியானவரின் அபிஷேகத்தின் ஓர் அடையாளம்.
இரட்சிக்கப்பட்ட நீ ஜெபிக்கும்போது, வேதம் வாசிக்கும்போது, ஆண்டவரே நீர் என்னைக் கொண்டு என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்? என வினவும்போது. உன்மேலான அவருடைய திட்டத்தை அவர் உனக்கு வெளிப்படுத்துவார். அந்த திட்டத்தினை நிறைவேற்றி முடிக்க ஆவியானவர் உன்னை அபிஷேகிப்பார். உனக்கு முன்னே சென்று உன்னை நடத்துவார். இரட்சிக்கப்பட்ட உன்னைக் கொண்டு உலகில் ஏதோ ஒரு திட்டம் நிறைவேறப்போகிறது என்பதை மீண்டும் உன்மேல் வந்தமர்ந்து உனக்கு உணர்த்துவதே அபிஷேகத்தின் ஆரம்பம்.
இந்த அபிஷேகத்தினையும் நீ உணர்ந்து, பெற்றுவிட்டாய் என்றபடியினால், மேற்கொண்டும் சில ஆலோசனைகளையும் வழங்க விரும்புகிறேன்.
அபிஷேகம் என்பது ஓர் கேஸ் சிலிண்டர் போன்றது ஒரே நேரத்தில் அப்படியே வெடித்து எரிந்து முடிந்துவிடம் பண்டிகை கால வெடி அல்ல. எதற்காக உன்னைத் தெரிந்துகொண்டாரோ, அதற்கானவைகளை அவர் உனக்குள்ளே அடைத்துவைத்து, மெல்ல மெல்ல உலகிற்கு வெளிக்காட்டுவார். தீயாக, வெளிச்சமாக எரியச் செய்வார்.
அபிஷேகத்தை நீ பெற்றிருந்தால், ஆவியானவரின் திசைக்கு நேராகத் திரும்பி நில். ஜெபத்தில் அந்த பாதை உனது கண்ணில் தெரியும். அதற்கான பெலமும் உனக்குக் கிடைக்கும், பெருகும். போதிக்கவோ, பாடவோ, ஆராதனை நடத்தவோ, மேய்ப்பனாகவோ, ஊழியனாகவோ அல்லது வேலை செய்துகொண்டே தேவ பணியினைச் செய்யும் மனிதனாகவோ உனது அழைப்பு உன் கண்ணில் தென்படலாம். தேவ அழைப்பு உன்னிடத்தில் நிறைவேற, அவரோடுடனான உனது உழைப்பும் இன்றியமையாதது. நீ எதுவுமே செய்யாமல், உன் மேல் வைத்திருக்கிற திட்டத்தை தேவனாக நிறைவேற்றிவிட்டு அதற்கு உன் பெயரைக் கொடுத்துவிடமாட்டார். தேவனோடு நடப்பதும், தேவனோடு உழைப்பதுமே உன்னை அந்த இலக்கினை அடையச் செய்யும்.
இரட்சிக்கப்படும்போது, நாம் தேவனுடைய பிள்ளைகளாகிறோம். நமது உள்ளத்தின் ஆவி அவருடைய ஆவியுடன் இணைக்கப்படுகின்றது. ஆனால், அவருக்காக நீ செயல்படும்படியாக ஆவியானவர் உன்னை மேலும் அபிஷேகித்து, பிரத்தியேகப்படுத்தும் நிலையின் நிகழ்வையும் தெளிவாக நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஆவியானவரின் அபிஷேகம் நம்மேல் இறங்கும்போது, சரீரத்தை ஆட்கொள்ளும்போது, அந்நிய பாஷை உடன் சில அதிர்வுகளுக்கும் உள்ளாவது இயல்பு. ஓர் உதாரணம், ஐஸ்கட்டி ஒன்றினை ஒருவருடைய கையிலோ முதுகிலோ அவர் அறியாத நேரத்தில் வைக்கும்போது, உஸ்ஸ் என்ற அதிர்வின் சர்த்தம் தடுக்க இயலாதது. அப்படியே அக்கினி ஒருவரைத் தொடும்போதும். இதுபோலவே, பெலவீனமான இதுவரை பாவத்திற்குட்பட்டிருந்த, அல்லது புதிதாக இரட்சிக்கப்பட்டிருந்த சரீரத்தினை பெலமான பரிசுத்த ஆவியானவர் தொடும்போது, அபிஷேகிக்கும்போது நடைபெறுகிறது. இந்தக் காரியத்தினால், ஒரு சிலர் குதிக்கலாம், கைதட்டலாம். ஆனால், இந்த ஆவியானவானின் அபிஷேகம் வெறும் துள்ளுவதற்கும், குதிப்பதற்கும் மாத்திரம் கொடுக்கப்படுவதல்ல, துள்ளுவதும், குதிப்பதும் மாத்திரம் ஆவியானவரின் அபிஷேகம் என்றும் அர்த்தமல்ல. ஒருவேளை அவைகள் நடந்தாலும், ஆவிக்குரிய வாழ்க்கையில் வளரத்தொடங்கும்போது, அபிஷேகத்தைத் உள்வாங்கிக்கொண்டு அது எதற்காகக் கொடுக்கப்ட்டதோ, அந்த நோக்கத்தினை நிறைவேற்றத் தொடங்குகிறார் அவர்.
மேலும் ஓர் உதாரணம். மின்சாரத்தை மனதன் தொடும்போது, சாக் அடிப்பதினால் துள்ளுவது இயல்புதான், எனினும் அதே மின்சாரத்தை ஒரு மின் விளக்கினுள் செலுத்தும்போது அது மற்றவர்களுக்கு பயன்கொடுக்கும்படியாக பிரகாசிக்கத் தொடங்குகிறது, ஒளிகொடுக்கத் தொடங்கிவிடுகிறது. அப்படியே அபிஷேகம் பெற்ற மனிதனும், மின்விளக்காக தன்னை மாற்றிக்கொண்டால், அவனுள் நுழையும் அபிஷேகம் மற்றவர்களுக்குப் பயனுள்ளதாக மாறிவிடும். அபிஷேகம் பெற்றதை ஆண்டவரிடமே காட்டிக்கொண்டிருந்து, மற்றவர்களுக்கு எந்த பிரயோஜனமாக வாழாதிருப்பது, எரிந்துகொண்டிருக்கிற விளக்கினை நோக்கி டார்ச் அடித்துக்கொண்டிருப்பதற்கு சமானமானது. நமது ஒளி இருளில் பிரகாசிக்கவேண்டும், இதற்கானதே அபிஷேகம்.
பிரசங்கிப்பதற்காக ஒருவேளை அவர் உன்னை அபிஷேகித்திருந்தால், நீ பிரசங்கம் செய்யும் காரியம் நிறைவேறத்தொhடங்கும் அப்படியே மற்ற அவரது நோக்கங்களும் நிறைவேறத் தொடங்கும். அந்த நோக்கங்கள் நிறைவேறும் போது, நீ துள்ளுவதற்கும், குதிப்பதற்கும் பதிலாக பிரசங்கித்துக்கொண்டிருப்பாய், அவர் அழைத்த அழைப்பினை நிறைவேற்றிக்கொண்டிருப்பாய். மேலும் ஓர் உதாரணம். பிரசங்கிப்பதற்காக தேவ அபிஷேகம் பெற்றவர்கள் பிரசங்கிப்பதற்குப் பதிலாக பிரசங்க பீடத்தில் குதித்துக்கொண்டிருந்தால் பயனிராதே. எனவே அபிஷேகம் பெற்றிருந்தால், அது என்ன நோக்கத்திறாக உனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொண்டு, அதனை நிறைவேற்ற உன்னை ஆயத்தப்படுத்துவது அவசியமானது. அதிலேயே உன் மேலுள்ள தேவ திட்டம் நிறைவேறும்.
வேகமும், விபத்தும்
இரட்சிப்பு எல்லாருக்கும் பொதுவானது, அழைப்பு வௌ;வேறானது. இரட்சிக்கப்பட்ட பின்னர் இதற்காத்தான் நீ அழைக்கப்பட்டிருக்கிறாய் என்ற தௌவு உண்டாகிவிட்டால், அதற்காக உன்னை அர்ப்பணித்துக்கொள். அதற்கான ஆரம்ப வேலைகளைச் செய், அஸ்திபாரமிடு, அன்றாடனம் ஓடு, அவருக்காக செயல்படு. என்றாலும் எல்லாம் ஒருவேளை நீ எதிர்பார்க்கும் வேகத்தில் நடைபெறாது போகலாம், கவலை வேண்டாம். அவர் சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்கிறவர், சோர்வு வேண்டாம்.
அபிஷேகத்தினைப் பெற்று அழைப்பை நோக்கி ஓடும்போது, தேவனது பார்வையில் வேகம் தேவையே, ஆனாலும் விவேகமும் அவர் விரும்புகிற வண்ணம் நமக்குத் தேவை. ஒரு சிறிய உதாரணம்.
ஒரு புதிய பைக் ஒன்றினை நீ வாங்கியிருக்கிறாய் என வைத்துக்கொள், அது சுமார் 160 கி.மீ வேகம் வரை செல்லும் சக்தி கொண்டது. அதற்காக அதனை பட்டணத்திற்குள் 160 கி.மீ வேகத்தில் ஓட்டிச் செல்ல முடியாது. கானாவூர் திருமணத்தில், திராட்சை ரசம் குறைவு பட்டபோது, 'என் வேளை இன்னும் வரவில்லை' என தனக்குக் குறிக்கப்பட்ட வேளைக்குக் காத்திருந்தார் இயேசு. எனவே நீயும் காத்திரு, தண்ணீர் ரசமாகும், அற்புதங்கள் நடக்கும்.
மேலும் ஓர் கோணத்தில் வேகத்தை உனக்கு விளக்க விரும்புகிறேன். 160 கி.மீ வேகத்தில் செல்வதற்கு உன்னை ஒருவன் தூண்டிவிட்டு, எதிரே அவனே ஒரு கல்லையோ, வேறொரு காரியத்தையோ வைத்துவிட்டால் விபத்து நடந்துவிடுமே. விவேகமில்லாத வேகத்தினால், எத்தனயோ ஆண்டுகள் வாழ்ந்து கர்த்தருக்காகவும் அவர் உனக்காகவும் வைத்திக்கிற தி;ட்டம் நிறைவேறாமல் அன்றே அந்த விபத்தோடு முடிந்துவிடுமே. இன்றைய நாட்களில் வாலிபர்கள் பைக்கில் சென்று விபத்துக்குள்ளாகி மரித்துவிடும்போது பெற்றோருடைய மனநிலை என்னவாயிருக்கும் என்பதை எண்ணிப்பார்த்தால் இது புரிவது எளிது.
தேவன் உன்னை நடத்துகின்ற வேகத்தை நான் கட்டுப்படுத்துகிறேன் என்ற நோக்கத்தில் நான் எழுதவில்லை, அந்த வேத்தை சத்துரு அதாவது பிசாசு கையில் எடுத்து உன்னை மோதவிட்டுவிடக்கூடாது என்றுதான் எழுதுகின்றேன்.
இயேசு தேவனுடைய குமாரன், பாமமில்லாதவர், உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்ப்பதற்க உன்னதத்திலிருந்து வந்தவர். அந்த இயேசுவையும் பிசாசானவன், உயர்ந்த மலையின் மேலும், தேவாலயத்தின் உப்பரிக்கையின் மேலும், வனாந்தரத்திலும் கொண்டுபோய் அவருக்கு நீர் தேவனுடைய குமாரன் தேவனுடைய குமாரன் என்று சொல்லிச் சொல்லி அவரது வேகத்தைத் தூண்டிவிட்டு அவரை மோதவிட நினைத்தான். வேத வசனத்திலிருந்து எடுத்து எடுத்து பேசி வேகத்தை அதிகரிக்கச் செய்தான். ஆனால், இயேசுவோ பிசாசின் நோக்கத்தை அடையாளம் கண்டுகொண்டார், தனது வேகத்திலேயே பிரயாணித்தார்.
இயேசுவின் வேகம் அவர் பிதாவுடன் நிர்ணயித்திருந்தது, லாசரு மரித்துவிட்டபோதிலும் அவருடைய வேகம் அதிகரித்துவிடவில்லை தன்னுடைய வேகத்திலேயே அவர் சென்றுகொண்டிருந்தார்.
எனவே, ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெற்றிருக்கும் நீ உனது வேகத்தைக் குறித்தும் கவனமாயிரு. தேவ சித்தத்தை அறிந்து, தேவ நோக்கத்தைப் புரிந்து, தேவனுக்கு ஏற்ற காலத்தினைத் தெரிந்துகொண்டு செயலில் இறங்கு. தேவ மனிதன் போகும் பாதையினைப் பிசாசு தடுக்க முடியாது, என்றாலும், தேவ மனிதனை அறியாத, கவனியாத, பொருட்படுத்தாத வேளையில் தூண்டிவிட்டு தன்னைத் தானே அழித்துக்கொள்ளச் செய்யும் தந்திரத்தை உடையவன் பிசாசு. கர்த்தருடைய ஜனத்தை சபிப்பதற்கு பிலேயாம் தீர்க்கதரிசியினால் கூடாது போயிற்று, ஆனால் கர்த்தருடைய ஜனங்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கெ hள்ளும் ஆலோசனையினை அவர் கொடுக்கும்படியாயிற்று, அவன் கொடுத்த ஆலோசனை நிறைவேறியும்போனது.
இயேசுவை குதிக்கச் சொன்னதுபோல, நம்மை நாமே அழித்துக்கொள்ளச் செய்யும் பிசாசின் சவால்களையும், ஆலோசனைகளையும் நீ அறிந்துகொள்.