Friday 20 July 2012

காதலிக்கலாமா?

'காதல் காற்று' என்ற கட்டுரையினை உங்கள் இணையதளத்தில் வாசித்தேன். பல புரிந்துகொள்ளவும், சில ஏற்றுக்கொள்ளவும் கடினமாயிருந்தது. காதைலைப் பற்றி நீங்கள் என்னதான் சொல்கிறீர்கள்? காதலிக்கலாமா?

காதலிக்கலாம், காதலிக்கக்கூடாது என ஒரு வார்த்தையில் நான் விடையளிக்கவேண்டும், விளக்கமளிக்கவேண்டாம் என நீ எதிர்பார்ப்பதை உனது கேள்வியிலேயே நான் புரிந்துகொண்டேன். 'ஏற்றுக்கொள்ள கடினமாயிருந்தது' என நீ எழுதியிருப்பதிலேயே, நீ காதல் பக்கம் நிற்கிறாய் என்பது தெளிவாகிறது. நெருப்பும் பஞ்சும் சேர்ந்து பெற்றோரைப் பற்றவைப்பதை விட பெற்றோரால் நெருப்பும் பஞ்சும் பற்றவைக்கப்படுவதே இறைவனது நியதி. ஒரு கடையில் உள்ள பொருளை பார்த்து வாங்க விரும்பலாம், பெற்றோரிடம் வாங்கித்தர கேட்கலாம் தவறில்லை; ஆனால், அந்தப் பொருள் கையில் வந்து கிடைப்பதற்கு முன்னால் அதையே நினைத்து கனவு உலகில் மூழ்குவதையே நான் காதல் என்கிறேன். கடைக்காரரும் பெற்றோரும் இணைந்து அப்பொருளைக் உனது கையில் கொடுப்பதற்கு முன்னால் அப்பொருளுக்கும் உனக்கும் எந்த உறவும் உனக்கு இல்லை என்பதை புரிந்துகொள்.