Monday 26 March 2012

காத​லைப் பற்றி



கீழே உள்ள கேள்விகள் அனைத்தும் நேரடியாகவும், கடிதங்கள் மூலமாகவும் என்னிடத்தில் வாலிபர்கள் கேட்டவை, அவர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு நான் அளித்த பதில்களும் உங்களுக்கும் பதிலாகக்கூடும் என்ற நோக்கத்தில் வெளியிட்டிருக்கிறேன்.

நான் பார்த்த பெண்ணின் மேல் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது, ஆனால் எனது பெற்றோர் அவளை ஏற்க மறுக்கின்றனர்,  என்ன செய்வது?

முழு நம்பிக்கை என்று எதைச் சொல்கிறாய் என எனக்குப் புரியவில்லை. அவள் மேல் உள்ள ஆசையினால் வருகின்ற வார்த்தைகள் இவை. பெற்றோருடைய பந்தம் எல்லா சொந்தங்களைக் காட்டிலும் பிரதானமானது, முக்கியமானது என்பதை அறிந்துகொள். உனக்கு மட்டுமல்ல நீ மணமுடிக்கும் பெண் உனது குடும்பத்துடன் இசைந்து வாழவேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது. திருமணம் முடித்து பெற்றோரைப் பிரிந்து சென்று தனியாக வாழ்க்கை நடத்தும் (வேலையின் நிமித்தம் செல்வோரை அல்ல, பெற்றோரை வெறுத்து ஒதுக்கித் தள்ளிவிட்டு போவோர்) நிலை இன்று தேசமெங்கும் பெருகி வருகின்றது. இதற்குக் காரணம், மணமுடித்த பெண் குடும்பத்துடன் ஒத்துப்போகாததே. பெண்ணுக்காக பெற்றோரையே ஒதுக்கும் நிலை உருவாகிவிடுகின்றது. பெற்றோர் எந்த காரியத்தைக் காட்டி வேண்டாம் என்று சொல்லுகின்றனர் என்பதை அறிந்துகொள்ளவேண்டும். அது சரியானது என்று அறிந்தால் அவர்களுக்கு கீழ்ப்படிவதுதானே நல்லது. ஒரு பெண்ணுக்காக பெற்றோரை விலைகொடுப்பது நியாயமானதன்று. எப்போதும் பெற்றோருடன் இணைந்துகொண்டால் நீங்கள் பாராட்டப்படுவீர்கள்

வேதத்தில் ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம் பண்ணினான், அவர்கள் ஈசாக்குக்கும் ரெபேக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள் (ஆதியாகமம் 26: 34,35) என்று வாசிக்கின்றோம். பெற்றோரை மனமடிவாக்கும் குணமுடைய பெண் தேவையா? அவளால் ஒரு நாள் உனக்கும் மனமடிவு உண்டாகும்.  

முதன் முதல் ஒரு வாலிபன் தனது காதலை என்னிடம் வெளிக்காட்டும்போது நான் என்ன செய்யவேண்டும்?

விலகிச் செல்வதுதான் உகந்தது, வலையில் மாட்டிக்கொண்டு சேலையை ஏன் கிழித்துக்கொள்ளவேண்டும். நீ அவனோடு ஏதாகிலும் சந்தர்ப்பங்களில் நெருங்கிப் பேசியிருந்தால் அவனுக்கு இந்த காதல் எண்ணம் வந்திருக்க வாய்ப்பு உண்டு. அவனது எண்ணத்தைப் புரிந்துகொண்ட பின்னர் நீ அவனிடமிருந்து உன்தை; தூரப்படுத்திக்கொள். நீ விலகிச் சென்றாலும் அவன் உன்னைத் தொடர்ந்து வந்தால் பெற்றோரிடமோ, பெரியவர்களிடமோ எடுத்துச் சொல்லி மற்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம். கன்னியே நீ கண்ணாடி காதலிக்கும் வாலிபன் உன்னைத் துண்டாடவிடாதே

நான் ஒரு வாலிபனை சகோதரனாகத் தான் எண்ணிப் பழகினேன், ஆனால், அவன் இப்போது என்னைக் காதலிப்பதாகக் கூறுகின்றான், சகோதரனைப் போலப் பாவித்து பழகிய எனக்கு இது பெரிய அதிர்ச்சியாயிருக்கிறது

இத்தகைய நிலை இன்றைய நாட்களில் பலருக்கு உண்டாகின்றது. உனது நிலையைக் குறித்து முதலில் நீ திட்டமாயிருக்கவேண்டும். நீ நண்பனாகத்தானே எண்ணி பழகியிருக்கின்றாய், எனவே நண்பனிடம் சொல்வதுபோலவே பொறுமையாய், மெதுவாய், நான் காதலிக்கும் நோக்கத்தோடு பழகவில்லை, நீ என்றும் எனக்கு நண்பன்தான் என்று உனது நிலையை அவனு;ககுப் புரிய வை. புரிந்துகொண்டால் தொடரட்டும் நட்பு, இல்லையென்றால் தொலை நிங்க அவன் எல்லைக்குள் நுழையாதிருப்பது உத்தமம். என்றபோதிலும், நண்பர்கள் பிரிவதால் உண்டாகும் வருத்தம் உனக்கும் உண்டாகும், அது நட்பினால் உண்டான வலிமை, அதனைத் தாங்கிக்கொண்டு மறந்துவிடும் தன்மை உனக்கு வரவேண்டும். என்னைப் பொறுத்தவரையில் எதிர்பாலரை நண்பர்களாகக் கொள்ளாதிருப்பது சாலச்சிறந்தது. முற்றிலும் தவறு என்று சொல்லவில்லை, அதில் ஆபத்து அதிகம் என்பதை சுட்டிக்காட்டவே இப்படிச் சொல்கின்றேன்

ஒரு வாலிபனுடன் தவறான உடலுறவு கொண்டுவிட்டேன், இப்போது அதனை விட்டுவிட்டேன், தவறென்று எண்ணுகின்றேன், அதுபோன்ற காரியங்களை இனி செய்யமாட்டேன் என்று முடிவெடுத்துள்ளேன். ஆனாலும் எனது மனதில் அந்த வடு அவ்வப்போது வந்து என்னை வருத்தத்திற்குள்ளாக்குகிறது, நான் என்ன செய்யவேண்டும்?

தவறு என்று நினைத்துவிட்டால், திருந்திவிட்டால் எந்த மனிதனுக்கும் மறுவாழ்வு உண்டு, கவலைப்படாதே. விழுந்ததையே எப்பொழுதும் நினைத்துக்கொண்டிராமல், வரும் வாழ்க்கையை வடிவமைக்கப் பிரயாசப்படு. வேதத்தில் உள்ள ஒரு வசனத்தை உனக்கு ஞாபகமூட்டுகின்றேன். நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம் (எபிரேயர் 9:14). இயேசுவை அண்டிக்கொண்டால் அந்த மனநிலையிலிருந்து உங்களை விடுவிக்க அவர் போதுமானவர். அவர் மன்னித்ததையும், மறந்துவிட்டதையும் நீங்கள் நினைத்து நிளைத்து கவலைப்படவேண்டிய அவசியமில்லை

எனது காதலைக் குறித்து பெற்றோரிடம் சொல்ல பயமாக இருக்கிறது? ஏதாவது வழி உண்டா?

பெற்றோரிடம் சொல்ல பயமாயிருக்கிறது என்று நினைத்து அவர்களுக்குத் தெரியாமல் ஓடிப்போய்விடாதிருங்கள். ஓடிப்போவது கோழையான முடிவு. உங்களது பெற்றோருக்கு நெருக்கமானவர்கள் மூலமாகவோ, உங்கள் உறவினர்களில் உங்களை நன்றாகப் புரிந்துகொண்டவர்கள் மூலமாகவோ தெரிவிக்க முற்படலாம். உங்களுக்கும் பெற்றோருக்கும் இடையில் வரும் நபர் இறை பக்தி உள்ளவராயிருப்பாரென்றால் நலமாயிருக்கும். என்னைப் பொருத்தவரையில் பெற்றோருக்கு இடையே பேசுவதற்கு தரகர்கள் தேவையில்லை. நல்ல நபர்கள் நடுவாக செயல்படுவார்களென்றால் அவர்கள் பெற்றோருக்கும் உங்களுக்கும் சரியான ஆலோசனை கொடுக்கமுடியும். ஆனால், நடுவாக செயல்படும் அந்த நபரின் சரியான தீர்வுகளுக்கு கீழ்ப்படிய நீங்கள் ஆயத்தமாயிருக்கவேண்டும்

எனது காதலிக்கு மற்ற வாலிபனுடன் தொடர்பு இருக்குமோ என்று நான் சந்தேகப்படுகின்றேன், என்ன செய்வது?

உடனே காதலை மறந்துவிட்டு, காதலியை விட்டுவிடுவது நல்லது. காதலித்தால் காதலியை நம்பினால்தான் அது காதல், நம்பாவிட்டால் மோதல் நிச்சயம் உண்டாகும் எச்சரிக்கை. சந்தேகம் என்ற வேர் உள்ளத்தில் உண்டாகிவிட்டால், அது வளர்ந்து வளர்ந்து வாழ்க்கையை நிச்சயம் அழித்துவிடும். உனக்கு சந்தேகம் உண்டானால் முதலில் உனது மனநிலையை சோதித்து அறிவது நல்லது. என்னை நேசிக்கும் நபர் யாரிடமும் பேசக்கூடாது என்ற மனநிலை இருந்தாலேயே இந்நிலை உண்டாகும். சாதாரணமாக யாரிடமும் பேசுவதைக் கூட மனம் சகித்துக்கொள்ளாது. இந்த சந்தேகத்துடன் அவளை திருமணம் முடித்தால், நீ வெளியே செல்லும்போது வீட்டில் மனைவியை உள்ளே வைத்துவிட்டு வெளியே பூட்டிவிட்டுச் செல்லும் கீழ்த்தரமான நிலையைக் கூட நீ கையிலெடுக்கும் சூழல் உண்டாகும்

என்னைக் காதலித்தவன் திடீரென இப்பொழுது நீ வேண்டாம் என்று சொல்லுகின்றான், என்ன செய்வது?

எனது கட்டுரையில் குறிப்பிட்டதுபோல அவன் காமத்திற்காக உன்னிடத்தில் பழகினவனாக இருக்கலாம். அப்படி நாங்கள் தவறாக நடந்துகொள்ளவில்லை என்று சொன்னால், அவனிடம் காரணத்தை அறிந்துகொள்ள முற்படலாம். நேரடியாகப் பேச வாய்ப்பு கிடைக்காவிட்டால், நம்பகமான நடுநிலை மனிதரின் துணையைத் தேடலாம். வீட்டில் எதிர்ப்பு, ஜாதி, மதம் போன்ற ஏதாவது பிரச்சனைகள் காதலனின் வீட்டில் உண்டாகி அதற்கு உனது காதலன் சம்மதித்து பெற்றோர் சொல்வது சரியே என்று நினைத்திருந்தால், விலகிக்கொள், வேறு வழி இல்லை. நான் அவனைக் காதலித்தது ஊருக்கெல்லாம் தெரியுமே என்னை திருமணம் முடிக்க யார் வருவார் என்று நினைப்பதெல்லாம் மெல்ல மெல்ல மறைந்துபோகும். காதலில் தோற்றவளாக அல்ல மனந்திருந்தி நற்பெயரெடுக்க முற்படு.

என்னைத் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் செத்துவிடுவேன் என்று என்னை  மிரட்டுகின்றான் என்ன வழி

இப்படிச் சொல்லும் சிலர் சாவதுண்டு, சிலர் அப்படியாவது மிரட்டிப் பார்ப்போம் என்று காய் நகர்த்துவதுமுண்டு. உன் பக்கம் தவறு இல்லை என்றால் அந்த சாவுக்கு நீ  பொறுப்பல்ல, அது தற்கொலை, நீ கொலையாளியாகமாட்டாய். அவனது வாழ்க்கையில் அவன் எடுத்த முடிவு அது. அவன் செத்துவிடுவேன் என்று சொல்வதால் அவனைத் திருமணம் மடித்து நீ வாழ்க்கையில் செத்துவிடாதே. ஒருதலைக் காதல் கொள்ளும் வாலிபர்கள் இம்முறையைக் கையில் எடுப்பதுண்டு. காதலிக்கும்போது, புகைப்படங்கள், கடிதங்கள் சில அடையாளங்களைக் கொடுத்திருந்தால்தான் பயம் உண்டாகும். இந்தக் காதலில் உனக்கு எந்த பங்கும் இல்லை என்றால் கவலைப்படாதே

காதலிக்கிறேன் எப்பொழுது பார்த்தாலும் எனக்கு எனது காதலியின் ஞாபகமே வருகின்றது, படிக்க முடியவில்லை. அவளைக் காணாவிட்டால் தலையே பித்துபிடித்ததுபோல இருக்கின்றது.

நன்றாகப் புரிந்துகொள், நீ காதலிக்கவில்லை கன்னி என்னும கண்ணியில் மாட்டிக்கொண்டாய் என்பதை உனது வார்த்தைகளே வெளிப்படுத்துகின்றன. உன்னை நீயே விடுவித்துக்கொள் தண்ணீரின் கீழே ஆழமாய் மூழ்கிவிட்டு திரும்பி சுவாசிக்கக் கூட மேலே வர முடியாத நிலையைப் போல இருக்கிறது உனது நிலை. நீ இப்போது என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்துகொள். அதற்காகச் செயல்படத் தொடங்கு. உனது வாழ்க்கையின் இலட்சியம் உனது கண்களுக்கு முன் வரட்டும். அவளைச் சிறியதாக்கவேண்டும் என்றால், இறைவனை உனது வாழ்க்கையில் பெரியவராக மாற்றிக்கொள். இறைவனின் அன்பை நீ உணர்ந்துகொண்டால் அது எல்லாவற்றிற்கும் மருந்து

காதலிக்கும் நாங்கள் உடலுறவு கொள்ளவில்லை, தொட்டுப் பழகுகிறோம், அவ்வப்போது முத்தங்களைப் பறிமாறிக்கொள்கின்றோம், இது தவறா?

உனது கேள்விக்கு ஒரே வார்த்தையில் தவறு என்று பதில் கொடுத்துவிடலாம். கண்பட்டு காதல் மலர்வதுண்டு, கைபட்டு கற்பு அழிந்துபோவதுண்டு. அழிவை ஏன் ஆரம்பித்துவைக்கவேண்டும். நெருப்பும் பஞ்சும் நெருங்கியிருப்பது தவறுதான்,  எப்பொழுதுவேண்டுமென்றாலும் தீ பற்றிக்கொள்ளும் ஆபத்து உண்டு தூரமாயிருங்கள், கைகூடி வந்தால் திருமணத்திற்குப் பின்னர் கைகோர்த்துப் போகலாமே

காதல் தோற்றுப் போனதால் தற்கொலை செய்யும் உணர்வு எப்பொழுதும் எனது மனதில் உண்டாகின்றது என்ன செய்வது?

காதலையெ நீ இன்னும் நினைத்துக்கொண்டிருப்பதால் உண்டாகும் ஆபத்து இது. காதலின் தோல்வியைக் குறித்து எப்பொழுதும் சிந்தித்துக்கொண்டிருப்பதைத் தவிர்த்துவிடு. நல்ல ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் கொடுக்கும் நண்பர்களுடன் உன்னை இணைத்தக்கொள். அவள் மட்டும்தான் உலகில் பெண் அல்ல, இன்னும் கோடிகள் உண்டு, கோழைத்தனமான முடிவு வேண்டாம். நீ இன்னும் வாழவேண்டிய வசந்தமான வாழ்க்கை ஏராளம் உண்டு, இந்த ஒன்றைக் காரணம் காட்டி அவை அனைத்தையும் அழித்துவிடாதே. இடறிய கல்லுக்காக ஏன் காலை வெட்டிக்கொள்ளவேண்டும். தற்கொலை உணர்வு மேலோங்கியே நின்றால், தேவ ஊழியர்களிடம் சென்று ஜெபித்து ஆலோசனை பெற்றுக்கொள். எது எப்படியானாலும், நீ உனது மனநிலையை மாற்றி இறைவனண்டை சேர்ந்தால் அத்தனையம் மாறிவிடும்,  கவலைப்படாதே

நான் காதலித்த பெண்ணை வேறொருவன் திருமணம் செய்துவிட்டான், அதனால் அவனை அழித்துவிடவேண்டும் அல்லது அந்த குடும்பத்தை இன்பமாக வாழவிடக்கூடாது என்ற எண்ணம் எனக்குள் உண்டாகிறது என்ன செய்வது?

முடிந்துபோனவைகளை முடிச்சு போட்டு தொடர்வது சரியானதல்ல. நடந்தது நடந்ததுதான் நீ மறக்கக் கற்றுக்கொள். அவள் காதலியாக இன்னும் உனது நினைவில் இருந்தால், இப்படிப்பட்ட எண்ணங்கள் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும். அவர்களை வாழவிடு, நீ வேறொரு வாழ்க்கையைத் தேடு. அவள் உனக்கு ஏதாவது ஞாபகப் பரிசுகளை, வாழ்த்து அட்டைகளை அனுப்பியிருந்தால் அவைகளை இன்னமும் பத்தரப்படுத்தி வைத்திராமல் அவைகளை வீசிவிடுவது நல்லது

நான் காதலிக்கின்ற வாலிபனோடு ஒருமுறை உடலுறவு கொண்டேன், அதற்குப் பின்னர் அவன் என்னை நேசிக்காததைப் போலவே உணருகின்றேன், இது எனது மனதின் பிரம்மையா, பயமாயிருக்கிறது?

கன்னியாக இருந்த நீ காலியாகிவிட்டாய் என்பதை முதலில் உனக்கு நினைப்பூட்ட விரும்புகின்றேன். கற்பு காலியாகிவிட்டதால் உனது மனதில் எழும் உணர்வுகளின் ஒரு பரிமாணம் தான் இந்த நிலை. மேலும், இனிமேல் என்னை விட்டுவிடுவானோ, வேறொருத்தியை திருமணம் செய்துகொள்ளுவானோ என்ற பயம் உனது நெஞ்சில் நிறைந்திருந்தாலும் இந்த நிலை உருவாகும். உன்னைச் சுற்றி வந்தவனை நீ இனி அவனைச் சுற்றிவரும் நிலைக்கு உன்னைத் தள்ளிவிட்டாய். உடலைக் கொடுத்துவிட்டு புலம்புவதைக் காட்டிலும், ஞானமாய் விலகியிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காதல்லவா. பூவில் தேன் அருந்திவிட்டு தேனீ பறந்து செல்வதுமுண்டு, மீண்டும் தேடிவருவதுமுண்டு. தேனை இழந்த மலர் நீ தேனீயைத் தேடிச் செல்வது இயலுமா? மீண்டும் மீண்டும் உடலுறவுக்கு உன்னை அவன் அழைத்தால் அதற்கு விலகி இருந்து அவனது பாசத்தைத் தக்கவைத்துக்கொள்ப்பார்,  அதற்கு நீ விலகுவதால் அவன் பறந்து சென்றால் மறந்துவிடு, கற்பை இழந்துவிட்டால் நீ கழித்துப்போடப்பட்டுவிடுவாய். எச்சில் இலையாய் நீ எறியப்படுவதைக் காட்டிலும், சரீரமாகிய உனது இலையில் கற்பாகிய சோற்ளை திருமணம் வரை காதலனுக்கு பரிமாறாமல் இருப்பது நல்லது

நான் காதலித்த வாலிபன் என்னை விட்டுவிட்டதால் திருமணமே வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன் இது சரியா

உன்னைக் காதலித்த வாலிபன் அந்த முடிவை எடுக்காதபோது, நீ மட்டும் ஏன் இந்த முடிவை எடுக்கவேண்டும்? வேறொருவனுடன் வாழுவதை என்னால் நினைத்தக்கூடப் பார்க்கமுடியவில்லை என்று சொல்லாதே, நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கவும் தெரியவேண்டும்.